நாய்கள்மருத்துவ சிகிச்சை

வயதான நாய்களைத் தாக்கும் எட்டு முக்கிய நோய்கள்

Eight diseases that affect aging pets

மனிதர்களைப் போலவே வயதானவுடன் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் (நாய்) நோய் தாக்குதல் அதிகரிக்கும். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் இதனை கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியமாகும். முதுமையடைந்த செல்லப்பிராணிகளுக்கு பெரும்பாலும் புற்றுநோய், இதய நோய், கல்லீரல் நோய், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள், சிறநீரகச் செயலிழப்பு மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி பாதிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் வலியை வாய்விட்டு சொல்ல முடியாது ஆதலால் அது குறித்து அறிந்து கொண்டு அதற்கான மருத்துவ உதவிகளை நாம்தான் செய்ய வேண்டும். சரி வயதான செல்லப்பிராணிகளை தாக்கும் எட்டு நோய்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு

மனிதர்களைப் போலவே செல்லப்பிராணிகளில் இந்த நோய் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் உடலின் கழிவுப்பொருட்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படாமல் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற கழிவுப்பொருட்களின் அளவு அதிகரிப்பதால் அசட்டோனோமியா மற்றும் யுரீமியா (சிறநீர் இரத்தத்தில் கலந்த நிலை) ஏற்படுகிறது. அதிகமாக நீர் அருந்துதல், அதிக அளவில் சிறுநீர் வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை, உடல் எடை குறைதல், இரத்தச் சோகை, சோர்ந்து காணப்படுதல் மற்றும் வாய்ப்புண் ஆகிய நோய் காணப்படுதல் மற்றும் வாய்ப்புண் ஆகிய நோய் அறிகுறிகளைக் கொண்டு மருத்துவரிடம் சிகிச்சைப் பெறுவது அவசியமாகும்.

2. இரத்தச்சேர்க்கை இதயச் செயலிழப்பு

செல்லப்பிராணி வளர்ப்போரால் ஆரம்ப காலத்திலேயே, இந்த நோயைக் கண்டறியப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், இது அதிகளவில் காணப்படுகிறது. இதயச் செயலிழப்பு காரணமாக இரத்தம் இதயத்திலிருந்து வெளியேற்றப்படாமலும் உள்வாங்க முடியாமலும் இரத்தச் சேர்க்கை மற்றும் திரவக் கோர்வை நிலை ஏற்படுகிறது. உடற்பயிற்சி சகிப்பின்மை, குறைவாகச் சாப்பிடுதல், இருமல், வயிற்றில் நீர்க் கோர்த்தல், மயக்க நிலை, படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்டு இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். இறுதிக் கட்ட நோய் நிலைகளில் இறப்பு நேரிடும்.

3. பல் சம்பந்தப்பட்ட நோய்கள்

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் வயதான செல்லப்பிராணிகளில் மிக அதிக அளவில் காணப்படக்கூடிய நோயாகும். அன்றாடம் பல்லைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் முற்றிலுமாகத் தடுக்கப்படக்கூடிய நோயாகும். நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் 3 வயதிலிருந்தே தொடங்கி விடுகின்றன. பாக்டீரியா பற்களிலும், பல் ஈறுகளிலும் தங்கிச் சேதத்தை ஏற்படுத்துவதால் கெட்ட சுவாசம், பற்சொத்தை, ஈரிலிருந்து இரத்தம் வடிதல், உணவு மெல்லும்போது வலி ஏற்படுதல் மற்றும் பற்சிதைவு ஆகிய அறிகுறிகள் காணப்படும். பற்களைச் சுத்தமாகப் பராமரித்தல், தினமும் பல் துலக்குதல், தரமிக்க உணவுப்பொருட்களை அளித்தல் மூலம் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கலாம்.

4. புற்றுநோய்

புற்றுநோய்களின் தாக்கம் வயதினைப் பொறுத்து அதிகமாகிறது. வயதான செல்லப்பிராணிகளில் பால் மடிப் புற்றுநோய், விதைப்பைப் புற்றுநோய் அதாவது செர்டோலி செல் புற்றுநோய் மற்றும் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வளரும் பருவத்திலேயே கருமுட்டை மற்றும் கருப்பை அகற்றுதல் மற்றும் விதை நீக்கம் செய்ய வேண்டும். கதிரியக்கச் சிகிச்சை மற்றும் தக்க வேதியியல் மருந்துகளையும் உபயோகப்படுத்தலாம்.

5. கருப்பைச் சீழ்

கருப்பை அகற்றப்படாத வயதான பெண் நாய்களில் இது பொதுவாக காணப்படுகிறது. சினைப்பருவ காலம் முடிந்து 4-6 வாரத்திற்குப் பிறகு இது பொதுவாகக் காணப்படுகிறது. கருப்பைச் சீழ் கொண்ட செல்லப்பிராணிகளில் காய்ச்சல் உணவுண்ணாமை, வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிகமாக நீர் அருந்துதல், அதிகமாகச் சிறுநீர் வெளியேற்றுதல், கருப்பை வாய் திறந்த செல்லப்பிராணிகளில் இரத்தத்துடன் சீழ் கலந்து வடியும். கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் மிகச் சிறந்ததாகும்.

6. நீரிழிவு நோய்

இது நடுத்தர வயது மற்றும் வயதான செல்லப்பிராணிகளில் அதிகம் காணப்படுகிறது. இரத்தத்திலும் சிறுநீரிலும் குளுக்கோஸ் அதிகமாகக் காணப்படும். அதிகமாக நீர் அருந்துதல், அதிகமாகச் சிறுநீர் வெளியேற்றுதல், உடல் எடை குறைதல் மற்றும் அதிகமாக உணவு உண்ணுதல் இந்த நோயின் வழக்கமான அறிகுறிகள் ஆகும். மருத்துவரின் ஆலோசனையின்படி உடல் எடை அதிகமுள்ள செல்லப்பிராணிகளில் குறைந்த கலோரிகள் உள்ள உணவும், நார்ச் சத்துக்கள் அதிகமுள்ள உணவும் மற்றும் உடல் எடை குறைவாக உள்ள செல்லப்பிராணிகளில் அதிக கலோரிகள் உள்ள உணவும், இன்சுலின் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

7. மூட்டு அழுகல் நோய்

இது மூட்டைச் சுற்றியுள்ள குருத்தெலும்பு தேய்மானமடைவதால் வயதான செல்லப்பிராணிகளில் ஏற்படுகிறது. இதனால் நடப்பதில் தடுமாற்றம், வாதம் மற்றும் கடினமான நடை ஆகியவை காணப்படும். ஆரம்ப காலங்களிலே மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியமானதாகும்.

8. தைராய்டு சுரப்பி குறைந்த நிலை

இது நாய்களில் அதிகளவில் தைராய்டு ஹார்மோனின் அளவு குறைவதால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நாய்களில் சோர்வு, முடி கொட்டுதல், உடல் எடை கூடுதல், குளிர் தாங்காமை, இரத்தத்தில் அதிகக் கொழுப்பு காணப்படுதல், இரத்தச் சோகை, தோல் உணர்நிறமூட்டல் மற்றும் இதயச் செயலிழப்பு காணப்படும். ஆரம்ப காலங்களிலே உரிய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எட்டு நோய்களும் வயதான நாய்களுக்கு நாய்களுக்கு மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் அனைத்துச் செல்லப்பிராணிகளுக்கும் ஏற்றதாகும் என்பைத நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Tamil Pets !!