கட்டுரைகள்நாய்கள்வளர்ப்பு&பராமரிப்பு

நாய்க் கண்காட்சி குறித்து ஓர் விரிவான பார்வை

Dog Exhibition

நாய்க் கண்காட்சி என்பது பலதரப்பட்ட நாய் வகைகள் பொதுமக்களுக்குத் காட்சிக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி நாய்கள் மற்றும் நாய் வளர்ப்போருக்கான ஊக்குவிக்கும் போட்டி. இது பல்வேறு நாய் வகைகளையும் அதன் வகைகளுக்கான உடலமைப்பு செயல்திறன் மற்றும் மனோபபாவங்களை அறிந்து கொள்ளப் பயன்படுகிறது.

கண்காட்சித் தளத்தில் ஒரே வகையைச் சேர்ந்த பல நாய்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட வகைக்கு உரிய பண்புகள், அடையாளங்கள் ஆகியவற்றால் சிறந்து விளங்கும் நாய் வெற்றி பெற்றதாகத் தேர்வு செய்யப்படுகிறது.

நாய்க் கண்காட்சியில் இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது

1. நாயின் வகைக்கான அடையாளங்கள் சிறந்து விளங்குவதற்கான போட்டி.

2. கீழ்ப் படிதல் குணத்துக்கான போட்டி

இவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

நாய் வகைக்கான அடையாளங்கள் சிறந்து விளங்குவதற்கான போட்டி

ஒரே வகையைச் சேர்ந்த நாய்கள் கண்காட்சி தளத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதற்கு இன வளையம் என்ற பெயர். பிறகு ஒரே குழுவைச் சேர்ந்த வேறுபட்ட நாய் வகைகள் காட்சிப்படுத்தப்படும். உதாரணத்துக்கு பணிக் குழுவைச் சேர்ந்த நாய்களான டாபர் மேன், பாக்சர், செயிண்ட் பெர்னார்டு போன்றவை ஒரே குழுவில் காட்சிப்படுத்தப்படும்.

கீழ்ப்படிதலுக்கான போட்டி

பயிற்சியாளரின் உத்தரவிற்கு ஏற்ப நாய் பல செயல்களில் ஈடுபடும் திறன் இதில் பரிசீலிக்கப்படும். நிற்றல், அமருதல் பொருள்களை எடுத்துவருதல் போன்ற கட்டளைகளைச் செயல்படுத்தும் திறன், நுகரும் திறன், கட்டளையிட்ட பின் அசையாமல் சொன்ன இடத்திலேயே உட்கார்ந்திருத்தல் போன்ற கீழ்ப்படிதல் குணங்களைக் கொண்டு தேர்வு செய்யப்படும்.

நாய்க் கண்காட்சியில் விதிகள்

1. கண்காட்சியில் கலந்துகொள்ளும் நாயினத்தில் கலப்பினமில்லாத வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்களே பங்கேற்க முடியும். ஒவ்வொரு இனத்திலும் வயது மற்றும் பாலினத்தைச் சார்ந்து குழுக்கள் அமைத்து அதில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் அந்தந்த வகையில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்படும்.

2. இந்தக் கண்காட்சியில் பங்குபெறும் அனைத்து நாய்களும் கென்னல் கிளப் ஆப் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3. நாய்க் கண்காட்சிகள் அறிவிக்கும்போது அவற்றில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

4. எந்தப் போட்டிப் பிரிவில் பங்கேற்க வேண்டுமோ அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.

5. பங்குபெறும் நாய்கள் மைக்ரோசிப் போட்டிருக்க வேண்டும்.

6. கண்காட்சியில் பங்கு கொள்ளும் அனைத்து நாய்களும் கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு அதற்கான சான்றுடன் வர வேண்டும். ஓழுங்கு கட்டுப்பாட்டுச் சோதனையில் பங்கேற்கும் நாய்களில் பெண் நாய்கள் சினைப்பருவத்தில் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அது மற்ற நாய்களின் கவனத்தைக் திசைதிருப்பி விடும். எனவே அந்த நாயின் உண்மையான செயல்திறனைக் கண்டறிய முடியாது.

சிறந்த நாய் இனத் தேர்வில் பங்கு பெறும் நாய்கள் சுகாதாரமாக எந்த நோயும் இல்லாதிருக்க வேண்டும். ஆண் நாய்களில் இரண்டு விரைகளும் ஸ்கொரோட்டம் என்ற தோல்பையில் சரியாக இறங்கி இருக்க வேண்டும்.

7. நாய்க கண்காட்சியில் நடுவர்கள், நாய்களை அவற்றின் வகைகளுக்கேற்ற பண்புகள், அடையாளங்கள் எந்த அளவிற்குப் பொருந்துகின்றன என்று தீர்மானித்துத் தேர்வு செய்வர். தேர்வுக்குழுவைச் சேர்ந்தவர்கள், கீழ்ப்படிதல் தேர்வில் நிபுணர்களாகவோ, அந்தந்த இனத்தின் சிறந்த நாயைத் தேர்ந்தெடுப்பதில் வல்லுநர்களாகவோ அல்லது குறிப்பிட்ட நாய் வகைகளில் நிபுணர்களாக இருப்பார்கள். தங்கள் கைகளால் நாயின் பற்கள், தசை, தோல் போன்றவற்றை ஆய்வு செய்வர். அவற்றின் நடை, ஓட்டம், தோற்றம் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

நாய் வகைகளின் தகுதிகள்

அந்தந்த நாய் வகைக்கு இருக்க வேண்டிய தகுதிகளைக் கொண்டு தான் நாய்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு நாய் வகைக்கு இருக்கக்கூடாத உடல் அமைப்பு மற்றும் குணங்கள் இருந்தால் அந்த நாய் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்துவிடும். உதாரணத்திற்கு ஜெர்மன் ஷெர்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்களுக்கு வால் சுருண்டு இருக்கக்கூடாது. பக் வகை நாய் உருளையாகக் குள்ளமாக, தோல் சுருக்கமாக, முகத்தோல் கருப்பாக, வால் சுருண்டு இருக்க வேண்டும்.

வெவ்வேறு நாய்கள் வகைகளின் தனித்துவத்தை அதனுடைய குணம், மனோபாவம், தோற்றம் போன்றவற்றைக் கொண்டு அந்தந்த வகை நாய்களின் செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இயலும். வலுவான முழுத்திறனையும் கண்டறிதல் அவசியம். எந்தவகை நாயாக இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் ஆரோக்கியம், நலன், வலுவான முழுத்திறன் போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகும்.

இந்திய நாய் வளர்ப்பு மன்றத்தின் (கென்னல் கிளப் ஆப் இந்தியா) நாய்க் கண்காட்சிகளில் கலந்துகொள்ளும் நாய்களின் வகைகள்

1. வேட்டை வகை நாய்கள் (ஹெளண்டு)

ஆரம்ப காலத்தில் வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த நாய்களில் பார்க்கும் சக்தியும், நுகரும் திறனும் மிகுதியாக இருக்கும். அதில் பீகில் மற்றும் பிலட் ஹெளண்டு வகை நுகரும் சக்தி கொண்டவை. விப்பட் மற்றும் கெரேஹெள்ண்டு போன்ற வேட்டை நாய்கள் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவை. இவ்வகை நாய்களுக்கு அதிக உடற்பயிற்சி தேவை. இவ்வகை நாய்கள் கம்பீரமாகவும், தனித்துவமாகவும் மற்றும நம்பிக்கைக்குரியதாகவும் உள்ள செல்லப் பிராணிகள்.

2. வேலைத்திறன் வகை நாய்கள்

இவ்வகை நாய்கள் பாதுகாப்பு, தேடல் மற்றும் மீட்புப் பணிக்காகக் காலம் காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாக்சர், கிரேட் டேன், செயின்ட் பெர்னாட்டு போன்ற நாய்கள் இவ்வகையில் அடங்கும். ஒதுக்கப்பட்ட பணிகளில் மிகுந்த திறனுடன் செயலாற்றும் சிறப்பு மிக்கவை.

3. விளையாட்டுத் தன்மை கொண்ட வகை நாய்கள்

இவ்வகை நாய்கள் வீரவளையாட்டு மற்றும் மீட்டுக்கொடுக்கும் சாகசங்களைச் செய்யக் கூடியவை. இவ்வகை நாய்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை (1) மீட்பு நாய்கள் (2) ஸ்பேனியல் (3) இலக்குடன் குறிபார்த்து வேட்டையாடி மீட்கும் நாய்கள் (செட்டர்ஸ்). இவ்வகை நாய்களுக்கு உடற்பயிற்சியும் கவனிப்பும் அவசியம் வேண்டும்.

4. டெரியர் வகை நாய்கள்

இவ்வகை நாய்கள் ஆரம்ப காலத்தில் பயிர்களைக் கொல்லும் பூச்சிகளை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவை இதர விளங்குகளைத் தைரியத்துடனும், கடுமையாகவும் எதிர்கொள்ளக்கூடியவை. இவ்வகைநாய்கள் ஆதிகாலத்திலிருந்தே புகழ் பெற்று விளங்கியவை. இடைப்பட்ட காலத்தில் எழுத்தாளர்களாலும், ஓவியர்களாலும் பாராட்டப்பட்டவை. இந்நாய்கள் தற்போது அனைவரையும் வேடிக்கையாக மகிழ்வித்துக் கவரக்கூடியதாக இருந்ததாலும், நெருப்புப் போன்ற மனோபாவத்தைக் கொண்டவை.

5. பயன்பாடடு வகை நாய்கள்

பல்வேறு உபயோகங்களுக்காக வளர்க்கப்படும் இந்நாய்கள் விளையாட்டுத்தனம் இல்லாத நாய்கள், புல்டாக், டால்மேசியன், ஜப்பானிய அகிடா, பூடுல் போன்ற நாய்கள இவ்வகையில் அடங்கும்.

6. ஆயர் வகை (பாஸ்டோரல்) நாய்கள்

இவ்வகை நாய்கள் ஆடு, மாடு போன்றவற்றை மேய்க்கும்போது அவைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளக் கூடியவை. இவ்வகை நாய்களுக்கு வானிலை மாற்றங்களை எதிர்கொள்ள இரண்டு வகை தோல் மேற்பரப்பு இருக்கும்.

7. மொம்மை வகை நாய்கள்

மடியில் வைத்துக்கொள்ளக்கூடிய சிறிய வகை நாய்கள், மனிதர்களுடன் மிகவும் நட்புடனும், அன்புடனும் வசீகரிக்கும் தன்மை கொண்டவை. இவ்வகை நாய்களுக்கு அதிக உடற்பயிற்சி தேவையில்லை. குறைவாகவே உண்ணக்கூடியவை மற்றும் மிகுந்த அறிவு கொண்டவை.

நாய் வளர்ப்போர் மேலே கூறிய வெவ்வேறு வகை நாய்களுக்கான போட்டியில் தங்கள் நாய்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது அதன் வயது, பாலினம், எந்தப் போட்டியில் கலந்துகொள்ளப்போகிறது என்பனவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

போட்டியில் நடுவர்கள் ஒவ்வொரு வகையில் வயதுப் பிரிவு, பாலினப்பிரிவு, போன்றவற்றில் சிறந்த நாய்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அதில் சிறந்த நாய்க்குட்டி, சிறந்த ஆண், சிறந்த பெண், அனைத்திலும் அந்த நாய் வகையிலே சிறந்த நாய் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பார்கள்.

கண்காட்சியில் சிறந்த நாய் விருது

பல்வேறு வகைகளில் சிறந்தவையாகத் தீர்மானிக்கப்பட்ட அனைத்து வகை நாய்களும் ஓரே தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு அதில் சிறந்த எட்டு நாய்கள் வரிசைப்படுத்தப்பட்டு வருதுகள் வழங்கப்படும். அதில் முதலாவதாகத் தேர்வு செய்யப்பட்ட நாய்க்கு கண்காட்சியின் சிறந்த நாய் விருது வழங்கப்படும். இது தவிர வெவ்வேறு வகை நாய்க்குட்டிகளில் சிறந்த நாய்க் குட்டியை தேர்ந்தெடுத்தும் விருது வழங்கப்படும்.

எழுத்து: : பா.நாகராஜன்

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!