கட்டுரைகள்நாய்கள்வளர்ப்பு&பராமரிப்பு

நாய்கள் குறித்த சந்தேகங்கள் – கேள்வி – பதில் 01

Doubts about dogs

சமூகத்தில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டு நாய் முதல் வெளிநாட்டு நாயினங்கள்வரை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். உலகமே கணினிமயமான காலகட்டத்திலிருந்தாலும் நாய் வளர்ப்போரிடம் இக்காலத்திலும் சில தவறான நம்பிக்கைகள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. இப்பிரச்சனையை மையமாக வைத்து அதற்கு விளக்கமளிக்கும் வகையிலும் தீர்வுகாணும் உரையாடல் கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி : நாயின் உணவில் உப்பைக் சேர்ப்பதனால் அதற்கு தோல் அரிப்பு மற்றும் தோல்வியாதிகள் வரும் என்பது உண்மையா?

பதில் : நாயின் உணவில் உப்பைச் சேர்ப்பதற்கும் அதற்குத் தோல் அரிப்பு மற்றும் தோல்வியாதிகள் வருவதற்கும் சம்பந்தமில்லை. உப்பே சேர்க்காமல் விட்டுவிட்டால் நோய்கள் மற்றும் சத்துக் குறைபாடு உண்டாக வாய்ப்புள்ளது.

கேள்வி : வேகவைக்காத பச்சை மாமிசத்தை நாய்களுக்குக் கொடுப்பதனால்தான் அதற்கு அதிக ஆக்கிரமிக்கும் பழக்கமும், மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் துரத்திக் கடிக்கும் பழக்கமும் வருகிறது என்ற நம்பிக்கை உள்ளது. இது சரியா?

பதில் : இந்தக் கருத்தில் உண்மையில்லை. எனினும், வேகவைக்காத பச்சை மாமிசம் மூலம் நாய்களுக்குச் சில நோய்கள் வர வாய்ப்புண்டு.

கேள்வி : நாய்களுக்கு வெளியில் தயாரிக்கப்படுகின்ற ஆயத்த உணவுகள் நல்லதா? அல்லது, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு நல்லதா?

பதில் : நாய்களுக்கென வீட்டில் தயாரிக்கப்படுகின்ற உணவு வகைகள் சமச்சீர் உணவுப்பொருள்களைக் கொண்டதாகவோ மற்றும் சரிவிகிதத்தில் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்க வாய்ப்புக் குறைவு. சில நல்ல தரமான நிறுவனங்களால் தயாரிக்கப்படும் நாய் உணவுகள் சமச்சீரான உணவுப்பொருள்களுடன் சரிவிகிதத்திலும் தயாரிக்கப்பட்டு அதற்கென உள்ள உயர்மட்டத் துறைசார் வல்லுநர்களால் அங்கீகரிக்கப் பட்டவை. மேலும் வயதுக்கேற்ற வகையிலும், குட்டிகள், கருவுற்ற நாய்கள் மற்றும் பாலுட்டும் நாய்களுக்கென அவற்றின் தேவைக்கேற்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன.

கேள்வி : உண்ணிகள் மற்றும் இதர பூச்சிகள் நாயைக் கடிக்காமலிருக்க அதன் உணவில் அதிக பூண்டைச் சேர்க்க வேண்டுமென்ற நம்பிக்கை நாய் வளர்ப்போர் மத்தியிலுள்ளது. இதற்கு விளக்கமென்ன?

பதில் : நாயின் உணவில் சிறிதளவு பூண்டைச் சேர்த்துக் கொடுப்பது சிறிது காலத்துக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கலாம். அதிக அளவு நாயின் உணவில் பூண்டைச் சேர்த்தால் அது நஞ்சாகிவிடும். இதற்குப் பூண்டைச் சேர்க்காமலிருப்பதே நல்லது. உண்ணிகள் மற்றும் பூச்சிகளை நாயின் உடலிலிருந்து விரட்ட அவ்வப்பொழுது நாய்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஆலோசனை பெறுவது நல்லது.

கேள்வி : வேகவைக்காத முட்டையை நாய்களுக்குக் கொடுக்க கூடாது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இது பற்றிய கருத்து என்ன?

பதில் : வேகவைக்காத முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள ‘அவிடின்’ எனும் பொருள் உடலிலுள்ள “பயோட்டின்” என்ற வைட்டமினைக் குறைத்துவிடும் என்பது அறிவியல் உண்மைதான். முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு பயோட்டின் வைட்டமின் சத்து உள்ளது. அதனால் வேகவைத்த முட்டையைக் கொடுப்பதே சிறந்தது.

கேள்வி : நாய் பச்சைப்புல்லை உண்ணுகிறது என்றால் அதற்கு வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம் என்று கூறுகிறார்கள். இது பற்றிய விளக்கம்?

பதில் : இதற்கு மருத்துவ ஆராய்ச்சியின் சான்றுகள் எதுவும் இல்லை. சலிப்பு ஒரு காணரமாக இருக்கலாமென நாய்களின் குணாதிசயங்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கேள்வி : நாட்டு நாய்களைவிட வெளிநாட்டு நாய் இனங்களே வளர்ப்பதற்கு ஏதுவானது என நம்பப்படுகிறது. அது உண்மையா?

பதில் : இதில் உண்மையில்லை. இந்த இரண்டு வகை நாய்களிடமும் பிடித்த மற்றும் பிடிக்காத குணாதிசயங்கள் உள்ளன. எந்த வகை நாய் இனம் வளர்ப்பதற்கு ஏதுவானது என்பது நாம் நாயிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.

கேள்வி : வளர்ந்த நாய்களுக்குப் புதுவித திறமைகளைக் கற்றுக் கொடுக்க இயலாது. மற்றும் அது ஏற்றுக் கொள்ளாது என்கிறார்கள். அது உண்மையா?

பதில் : வளர்ந்த நாய்களும் வயதான நாய்களும் கூட அதற்குப் பயிற்சி அளிக்கும் முறையைப் பொறுத்து புதுத் திறமைகளைப் கற்றுக்கொள்கின்றன என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்

கேள்வி : நாய் வாலை ஆட்டிக் கொண்டிருப்பது அது மகிழ்ச்சியாக உள்ளது என்பதைக் குறிக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இதில் உண்மையிருக்கிறதா?

பதில் : இது முழுவதம் உண்மையல்ல. பயம் கலந்த சூழல், எதிர்பார்ப்பு மற்றும் கோபத்துடன் தாக்கத் தயாராகுவது போன்ற சமயங்களிலும் கூட நாய் தன் வாலை ஆட்டுகிறது. எனவே நாய் வாலை ஆட்டினால் அது மகிழ்ச்சியாக உள்ளது என உறுதியாகக் கூற இயலாது.

கேள்வி : அயலின நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காகவும், மலம் கழிப்பதற்காகவும் அதன் மூக்கை வருடிக் கொடுக்க வேண்டுமா?

பதில் : அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை.

கேள்வி : நாயின் வறண்ட அல்லது சூடான மூக்கு அதற்கு நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. இது உண்மையா?

பதில் : நாயின் மூக்கு எப்பொழுதும் ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதில்லை. சில சமயங்களில் மூக்கு வறண்டு இருப்பது சாதாரணமானது தான். இதுவே தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

கேள்வி : ஒரு நாய் சிறிய சப்தத்துடன் உருமிக் கொண்டு ஒருவரை நோக்கி வருகிறது என்றால் அது அவர் மீது ஆதிக்கம் செய்கிறது என்று அர்த்தம். இது சரியா?

பதில் : இது ஓரளவு உண்மையானது. இச்சமயங்களில் அதனை அமைதியுறச் செய்ய முயற்சி செய்யாமல் மெதுவாகப் பின்வாங்கி விடுவதே நல்லது.

கேள்வி : ஆண் நாய்களின கெட்ட மற்றும் ஆதிக்க குணங்களை விரை நீக்க அறுவைச் சிகிச்சை (குடும்பக் கட்டுப்பாடு) மூலம் சரி செய்துவிடலாம் என்கிறார்கள். இது சரியா?

பதில் : விரை நீக்க அறுவைச் சிகிச்சை செய்வதனால் ஓரளவு ஆதிக்க குணங்கள் குறையலாம். எனினும் உறுதியாகச் சொல்ல முடியாது. அதனிடமுள்ள தேவையற்ற குணாதிசயங்களை விரை நீக்கம் செய்வது மூலம் சரிசெய்ய இயலாது.

கேள்வி : நாய் ஊளைவிடுவது, நாய் வளர்ப்போர் வீட்டிலோ அல்லது அப்பகுதியிலோ அசம்பாவிதம் ஏதோ நடக்கப் போவதற்கான அறிகுறி என்று நம்புகிறார்கள். இது பற்றிய உண்மை நிலை என்ன?

பதில் : இதில் எள்ளளவும் உண்மை இல்லை. ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் சொன்னது ஒரு சம நேர நிகழ்வுதான். எனினும் பூகம்பம் சுனாமி போன்ற நில அதிர்வுகளை உருவாக்கும் இயற்கைப் பேரிடர் நடப்பதற்குச் சற்று முன்னால் நாய்கள் அமைதியற்ற நிலையில் ஊளையிட்டு கத்தியிருப்பதும் ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி : மேல்நோக்கி சுருண்ட வால் கொண்ட நாய்கள் வீட்டுக்குப் பொருந்தாதவை மற்றும் அதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும் என்று நாய் வளர்ப்போரால் நம்பப்படுகிறது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

பதில் : சுருண்ட வால் கொண்ட நாய் வீட்டில் இருப்பதற்கும் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கேள்வி : நாய்களினால் நிறங்களைப் பிரித்தறிய இயலாது என்கிறார்களே அது சரியா?

பதில் : தவறு. நாய்களால் நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களைப் பிரித்தறிய இயலும்.

கேள்வி : எல்லா நாய்களும் பூனைகளை வெறுக்கின்றன. இது ஏன்?

பதில் : இதில் ஓரளவு உண்மை உள்ளது என்றாலும், முற்றிலும் ஏற்புடையது அல்ல. வாழ்விடச் சூழ்நிலைகளைப் பொறுத்து இரண்டும் சண்டையிடாமலும் இருக்கும்

கேள்வி : ஒரு முறையாவது குட்டி ஈன்ற பின்னரே பெண் நாயைக் கருத்தடைச் செய்ய வேண்டும். இது பற்றிய கருத்து?

பதில் : அவ்வாறு எந்த நிபந்தனைகளும் இல்லை. கருத்தடை செய்வதற்கு குட்டி ஈன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கேள்வி : நாயின் உமிழ்நீர் நோய்க் கிருமி அழிக்கும் சக்தி பெற்றது எனவும் அதனை மனிதர்களின் காயங்களுக்குப் பூசிவிடலாம் என்று கூறுகிறார்கள். இந்தக் கூற்று உண்மையா?

பதில் : முற்காலத்தில் அப்படி நம்பப்பட்டது. எனினும் நாயின் உமிழ்நீர் மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே அவ்வாறு செய்ய வேண்டாம்.

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!