நாய்கள்வளர்ப்பு&பராமரிப்பு

நாய்களின் நகங்களை ஏன் வெட்ட வேண்டும் ? எப்போது வெட்ட வேண்டும் ?

Why cut dog claws? When to cut?

நாம் நாய் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதனுடன் நம் நேரத்தை செலவிட தாயராக வேண்டும். அதனுடன் ஏன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற கேள்விக்கு பலருக்கும் விடை தெரிந்திருக்கும். இருந்தாலும் கூறுகின்றேன் நாய்களுடன் பழகுவதற்கும், பாசம்காட்டி கொஞ்சுவதற்கு மட்டும் நேரம் ஒதுக்குவது அல்ல, அதனை பாரமரிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அதற்கு முன்பாக நாய் பராமரிப்புக் குறித்து நாம் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முறை நாம் பார்க்கப் போவது நாய்களின் நகங்களை எப்போது வெட்ட வேண்டும் ? ஏன் வெட்ட வேண்டும் என்பது பற்றிதான். செல்வோமா…

நாய்களுக்கு நகம் வெட்ட வேண்டுமா ? ஆமாம் நமக்கு எப்படி நகங்களை வெட்டிப் பாதுகாப்பாக வைக்கின்றோமோ அதேபோல் நாய்களுக்கும் நகங்களை வெட்டி பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு நாய்க்கும் நகத்தின் அளவு, நீளம், அகலம் ஆகியவை வேறுபடும். சில நாய்களின் நகங்களை கத்தியை விட கூர்மையாக இருக்கும். நம்மை கொஞ்ச வரும்போது அந்த நகங்களை நம் உடலை பதம்பார்த்து விடலாம். அதனால் ஏற்படும் காயம் நீண்ட நாள் மட்டுமின்றி அதிக எரிச்சலைக் கொடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதே போல் வீட்டில் குழந்தைகள் இருந்தால் பிஞ்சு உடம்பில் நாய்களின் நகங்கள் பதிந்துவிடலாம். சரி இப்பொழுது விசயத்திற்கு வருகின்றேன்.

எப்போதாவது நாய்களின் விரல் நகங்களை வெட்டிவிட வேண்டும். எத்தனை நாளைக்கு ஒரு முறை நகம் வெட்டிவிட வேண்டும் என்பது நாய் வளர்க்கப்படுகின்ற தரையைப் பொருத்தே அமையும். வீட்டிற்கு வெளியே வளர்க்கும் நாய்களின் நகங்கள் இயற்கையாகவே கீழ்நோக்கி நிலத்தைப் பற்றிப் பிடிக்கும் வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அவ்விதம் அமைந்திருக்காததால் நாம் தான் அதன் நகத்தை அடிக்கடி ஆராய்ந்து சீர்செய்ய வேண்டும். நகங்கள் கடினமாக இருந்தால், நாய்களுக்கு குளிப்பாட்டியவுடன், ஈரமாக இருக்கும் போது வெட்டினால், ஈஸியாக வெட்டலாம்.

நகம் வெட்டும் கருவிகள் செல்லப் பிராணிகளுக்கான கடையிலோ கால்நடை மருத்துவரிடமோ கிடைக்கும். அவற்றைக் கொண்டு நகம் வெட்டும்போது நகங்கள் சேதமுறாமல், வலி ஏற்படாமல், இரத்தக் காயம் ஏற்படாமல் இருப்பது அவசியம். நகவெட்டிகள் கூர்மையாக இருத்தல் மிக அவசியம். அப்போது தான் அவை நகத்தை நசுக்காமல் வெட்டும். வெண்ணிற நகமுடைய நாய்களில் இரத்த ஓட்டம் இருக்கும் இடம் வரை தெளிவாகத் தெரியும். கருநிற நகமுடைய நாய்களில் இந்த இடம் தெளிவாகத் தெரியாது. ஆதனால் இரத்த ஓட்டம் இருக்கும் இடத்தை வெட்டி விடாமல் கவனமாக இருக்க வேண்டும். இவற்றையும் மீறி இரத்தம் வந்தால் இரத்தம் உறையும் மருந்தைப் பூச வேண்டும்.

மாதம் ஒரு முறை நாய்களின் நகங்கள் எப்படி உள்ளது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப நகங்களை வெட்டலாம். நாய்க்குட்டிகள் – 6 வாரங்களில் 1 முறை. அதேபோல் ஒட்டுண்ணிகள் நாய்களின் நகங்களின் இடுக்குகளில் இருக்கும். நகம் வெட்டும் பொழுது அதனையும் சேர்த்து நீக்கலாம். முக்கியமாக நகங்கள் வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்றால் நாய்களின் நடையின் தன்மை மாறுபடும். அதாவது கம்பீரமான நடை காணாமல் போக அதிக வாய்ப்புண்டு. ஆதலால் டைல்ஸ் போன்ற நவீன வீட்டுத் தரையில் வளர்ப்பவர்கள் நாய்களின் நகங்கள் மீது எப்போதும் கவனமாக இருங்கள். நமக்கு கைகள் இருப்பதுபோல் நாய்களுக்கு இல்லை. அவைகளுக்கு அனைத்துமே கால்களும், அதன் நகங்களும் மட்டுமே.

இறுதியாக எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு கேள்வி ? தெரு நாய்களுக்கு எல்லாம் நகங்களை யார் வெட்டி விடுகின்றார்கள் என்பதுதான். அதற்கான பதில் தெருநாய்கள் தரையில் வாழ்பவை ஆதலால் வளரும் நகங்களால் அவற்றிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் சிமெண்ட், டைல்ஸ், மார்பில் என வளரக் கூடியவை. ஆதலால்தான் வளர்ப்பு நாய்களுக்கு நகங்களை வெட்டுதல் அவசியமாகிறது. மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகின்றேன். நகங்களை வெட்டும்போது கவனம் அதிகம் தேவை. மீண்டும் அடுத்த பதிவில் வேறு ஒரு தகவலுடன் உங்களைச் சந்திக்கின்றேன்.

எழுத்து; கிஷோர்

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
பகிருங்கள்
Source
hellomadurai.in

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!