நாய்கள்பெட்ஸ் டிப்ஸ்வளர்ப்பு&பராமரிப்பு

நாய்களின் இனங்களும் வளர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் முறைகளும்

Dog breeds and selection methods for breeding

உலகம் முழுவதும் செல்லப்பிராணிகள் என்றால் முதல் இடத்தைப் பிடிப்பது நாயாகத் தான் இருக்கும். நகர்ப்பகுதிகளில் வாழுகின்ற மக்களும் நாய் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். பொழுது போக்கிற்கெனச் சிலரும் பாதுகாப்பு கருதியும் குழந்தைகளின் ஆசையின் பேரிலும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உற்ற நண்பனாகவும் மற்றும் சிலரால் தங்களின் பகட்டான வாழ்க்கை நிலையை வெளிப்படுத்தும் அம்சமாகவும் நாய் வளர்ப்பு நகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் நாய்களை வயல் புறங்களிலும் வீடுகளிலும் பாதுகாப்புக்கென வளர்க்கின்றனர். விற்பனை வாய்ப்புக் கருதி வியாபார நோக்கில் நாய் இனங்களின் இனப்பெருக்கத்திலும் சிலர் ஈடுபடுகின்றனர்.

பயன் கருதிய வகைப்பாடு

நாய்கள் அனைத்தும் உலகெங்கிலும் காணுதற்கு ஒன்று போல் அல்லாமல் தோற்றத்தில் பல்வகை வேறுபாட்டுடன் காணப்படுகின்றன. அளவு, நிறம், அமைப்பு மற்றும நடத்தை ஆகினவற்றை ஒப்பீட்டளவில் ஒரே பண்புகள் கொண்டவையாக இரக்கும்படி அமையப்பெற்றவற்றைத் தனித்தனி நாய் இனங்களாக வகைப்படுத்தியுள்ளனர். எந்த இனத்தைச் சேர்ந்தவை எனச் சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான “கென்னல் கிளப்” அமைப்பானது 350 நாய் இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாய்களின் பல வகையான இனங்களும் துணைவகைகளும் இருப்பினும், அவற்றின் பொதுவான வகைகளாவன: தோழமை நாய்கள், பாதுகாவல் நாய்கள், வேட்டை நாய்கள், பணி நாய்கள், வேட்டை மீட்டெடுப்பு நாய்கள் மற்றும் பொம்மை இனங்கள்.

1. தோழமை நாய்கள்

தோழமை நாய்கள் தனிமையைப் போக்கும் நோக்கத்திற்காக வளர்க்கப்படுபவை. இவை காண்பதற்கு அழகிய தோற்றத்துடனும், விளையாட்டுப் பண்பு நிறைந்தவையாகவும் இருக்கும்.

மால்தீஸ்

ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்டது. நீண்ட முடி கொண்டது. அதனைச் சீவிசிங்காரித்து ரிப்பன் தவிர்த்து அழகுக் கொண்டையும் போடலாம்  உரோமப் பராமரிப்பு மிகவும் முக்கியம். குழந்தைகளுடன் இணைந்து விளையாடும்.

லஷ் ஆப்சோ

திபெத்  நாட்டை சேர்நத இனம் அதிக முடியும், அதிக குரைப்புத் தன்மையும் கொண்டது. 6-7 கிலோ எடையும் இருக்கும். சிறந்த தோழமை இனம்.

காக்கர் ஸ்பேனியல்

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வகைகள் உள்ளன. பழுப்பு மற்றும் கருப்பு, பெளிளை கலந்த நிறங்களில் இருக்கும். நீண்ட காது மடல்களும் உரோமக்கற்றைகளும் கொண்டவை. சிறந்த தோழமை இனம், கண் தோல் பகுதி மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகளால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன.

டால்மேசன்

துவக்கத்தில் பறவை வேட்டையிலும் வண்டி இழுப்பதிலும் உட்படுத்தப்பட்ட இனம் வெண்ணிற உடலில் கரும்புள்ளிகளுடன் கவர்ச்சிகரமான தோற்றம் உடையது. ஆசிய நாடுகளில் உருவாக்கப்பட்ட சிறந்த தோழமை இன நாய்.

டேசண்ட்

பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் குறைந்த உயரம் கொண்ட இனம். தைரியமும் புத்திசாலித்தனமும் நிறைந்தது. எளிதில் பராமரிக்கலாம்.  குழந்தைகளின் தோழமையை விரும்பும், குட்டையான கால்களைக் கொண்டது.

ஸ்பிட்ஸ்

வடக்கு மண்டலக் குளிர்ப்பகுதிகளான ரஷ்யா, ஆலாஸ்கன் மற்றும் கனடாப் பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. தோழமை இனமாகவும், வேட்டைக்கும் வண்டி இழுக்கவும் பயன்படுத்தப்பட்டவை. சிறிய பெமெரேனியன், வெண்ணிற ஜெர்மன் மற்றும் ஜப்பானிய ஸ்பிட்ஸ், ஆலாஸ்கன், எஸ்கிமோ, ஜஸ்லாண்ட் இனங்கள் இவற்றில் அடங்கும். அடர்த்தியான உரோமம் சிறிய காது மடல்களும் கொண்டு, பனிப்பகுதி வளர்ப்பிற்கு ஏற்றவையாக உள்ளன. நல்ல உடற்பயிற்சி தேவை. தற்போது பனிப்பகுதி நாடுகளிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு உலகின் பல பகுதிகளிலும் தோழமை இனங்களாக வளர்க்கப்படுகின்றன.

2. பாதுகாவல் நாய்கள்

காவல் நாய்கள் முரட்டுத் தோற்றத்தையும், ஆக்ரோசமான பண்பையும் கொண்டிருக்கும். இவை அன்னியர்களைக் கண்டால் தாக்கும் இயல்பு கொண்டவை. இவை வீட்டைக் காப்பதற்காக வளர்க்கப்படுகின்றன.

புல்டாக்

துவக்கத்தில் எருது வேட்டையில் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர் பெற்றது. கொடூரமான முக அமைப்பு கொண்டது என்றாலும், சிறந்த தோழமை இனமாகவும் வளர்க்க ஏற்றது. சிறந்த உடல் திறனும் தைரியமும் கொண்ட இவ்வின நாய்களுக்கு இளம் வயதிலேயே பயிற்சி அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

டாபர்மேன்

உயரமாக மெலிந்த தோற்றம் உடையவை. கருப்பு மற்றும் பழுப்ப நிறத்தில் காணப்படுகின்றன. தோழமை இனமாகவும், பாதுகாவல் நோக்கத்திற்காகவும் வளர்க்க ஏற்றவை. 30 முதல் 40 கிலோ எடை உடையவை, தலையை உயர்த்திக்  கம்பீரமாக உயர்ந்து நிற்கும், பணிவுக் குணம் உடையவை.

3. பணி நாய்கள்

பணி நாய் என்பது வேலை செய்யப் பயன்படுத்தப்படும் விலங்கு, அதாவது, வெறுமனே ஒரு செல்லப்பிராணியாக மட்டுமில்லாமல் பல்வேறு வகையான வேலைகளைச் செய்யப் பழக்கப்படுத்தப்பட்டவையாகும். உதாரணத்திற்குப் பனி வண்டிகளை இழுக்கச் சைபீரியன் ஹஸ்கி நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஷெப்பர்ட் இன நாய்கள் ஆடு மேய்க்கப் பயன்படுகின்றன. மோப்ப நாய்கள் குற்றவாளிளை கண்டறிதல், வெடிபொருள்களைக் கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றன.

ஜெர்மன் ஷெபர்டு

உலகில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படும் இனம், அல்சேசன் என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மனி நாட்டில் உருவாக்கப்பட்டது. 34 முதல் 43 கிலோ எடையுடன் அனைவரையும் அச்சுறுத்தும் தோற்றம் கொண்டது. கருமை நிறத்தில் அடிவயிறு மற்றும் கால் பகுதிகளில் பெரிதும் பழுப்பு நிற உரோமத்துடன் காணப்படும். உதவிக்கெனவும், பாதுகாவல்  நோக்கத்திற்காகவும் வளர்க்கப்படுவது, குட்டை முடி கொண்டதாக உள்ளதால் பெரிதும் விரும்பப்படுகிறது. மேல் உயர்ந்த காதுகளும் முன்புறம் குறுகிச் செல்லும் முக அமைப்பும் அகன்ற மார்பும் நீண்ட உடலும் உரோமம் கொண்ட வால் பகுதியும் ஒரு கம்பீரத் தோற்றத்தை வழங்குகின்றது. ஆட்டு மந்தை மேய்ப்பிலும் இவ்வினம் பயன்படுத்தப்படுகிறது.

லேப்ராடர்

உடலில் சற்றே பெரிய அமைப்புடையதாக இருந்தாலும் சிறந்த பணிவுக்குணமும் நன்றி உணர்ச்சியும் கொண்ட நாய்கள், கறுப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் காணப்படுகின்றன.

4. வேட்டை நாய்

வேட்டை நாய் என்பது வேட்டைக்காரர்களால், கண்ணில் தென்படும் இரையை வேட்டையாடுவதற்காகவே வளர்க்கப்டுகின்றன. ஹவுண்ட மற்றும் விப்பட் போன்றவை இவ்வகை நாயினங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

தமிழ்நாட்டில் வேட்டைக்காரர்களால் விரும்பி வளர்க்கப்படும் வேட்டை நாய் வகைகளில் சில. 1. இராஜபாளையம் நாய், 2. கோம்பை நாய், 3. சிப்பிப்பாறை நாய், 4. கன்னி நாய்

நம்நாட்டில் பெரும்பாலும் குறிப்பிட்ட உடலமைப்புக் கொண்ட சிறப்பினங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. எனவே, கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் நாய்கள் பலவித உடலமைப்பு அம்சங்களுடன் குறிப்பிட்டு விவரிக்க இயலாதவாறே காணப்படுகின்றன. என்றாலும் அக்கால அரசப் பரம்பரையில் கண்காணிப்பில் சில குறிப்பிட்ட நாய் இனங்கள் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அவை இராஜபாளையம் இனம், வெண்ணிறத்தில் பழுப்பு நிறப்புள்ளிகளுடன் உயர்ந்த மெலிந்ததாக இருக்கும். புதியவர்களை அண்டவிடாமல் பாய்நது குரைத்து விரட்டும் வீர குணம் உடையது.

5. வேட்டை மீட்டெடுப்பு நாய்கள்

வேட்டை மீட்டெடுப்பு நாய்கள் வேட்டையர்களால் வேட்டையாடப்பட்ட, அல்லது சுடப்பட்ட இரையை மீட்டெத்துக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை. லேப்ரடார் ரெட்றைவர், கோல்டன் ரெட்றைவர் போன்றவை இவ்வகை நாயினங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

6. பொம்மை இனங்கள்

இவ்வகை நாய்கள் அளவில் சிறியதாகவும் பொம்மை போன்றும் இருக்கும்

பூடுல்

சுறுசுறுப்பான அழகான தோற்றம் கொண்ட இனம்,  எளிதாகப் பயிற்சி அளிக்கலாம். வால் மற்றும் கால் பகுதிகளில் உருண்டை வடிவ முடிப்பகுதிகளுடன் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவரும் வண்ணம் கம்பி வட்ட விளையாட்டுகளில் ஈடுபடுத்தப்பட்டது.

பொமெரேனியன்

வளர்ப்போரிடம் மிகுந்த ஈடுபாடு காட்டுபவை. குறைந்த எடை உடையவை என்றாலும் பெரிய நாய் போலக் காட்டிக் கொள்வதற்காகப் பின்னங்கால்களை மட்டும் தரையில் ஊன்றி எழுந்து நிற்கும். துவக்கத்தில் வெண்மை நிறத்தில் சற்றே பெரிய உடலமைப்பைக் கொண்டிருந்த இவ்வினம் தற்போது குறைந்த எடையில் பழுப்பு வண்ணம் கொண்டதாக மட்டும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. அடர்த்தி கொண்ட இதன் முடியைத் தினம் கோதி விட வேண்டியது அவசியம். வீட்டில் தனியாக விட்டுச் செல்ல நேரிட்டால், அதிக நேரம் குரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் கொண்டது.

பீகிஞ்சீஸ்

அளவில் மிகச் சிறியதாக இருப்பினும் மிகவும் தைரியம் உடையது.  அனைவரையும் தன் நடவடிக்கைகளால் கவர்ந்திழுக்க முயற்சிக்கும். உரோமத்தையும் கண்களையும் பராமரிப்பதில் தினமும் கவனம் தேவை.

சிகுவாகுவா

கருமை மற்றும் பழுப்பு நிறம் கலந்த உடலமைப்பில் நரிப்போல் தோற்றமளிக்கும், சிறந்த அறிவுடையது. குறைந்த எடையில் எளிதில் பராமரிக்க அற்றது. உரோம அளவு குறைவே நீண்ட ஆயள் கொண்டது.

ஆதாரம் : ராம்பிரபு, கால்நடைக்கதிர்

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Tamil Pets !!