பறவைகள்வளர்ப்பும் பராமரிப்பும்

செல்லப் பறவைகள் வளர்ப்பு ஓர் பார்வை

Pet birds

நம்மில் பலர் தங்கள் வீடுகளில் நாய், பூனை, நேசப் பறவைகள் எனப் பல வகையான செல்லப் பிராணிகள் வளர்க்கிறோம். ஆனால் மேலைநாடுகளில் சிங்கம், புலி, ஆமை மற்றும் மலைப் பாம்புகளையும் செல்லமாக வளர்க்கின்றனர். தற்பொழுது தமிழகத்தில் நாய் மற்றும் பூனைக்கு இணையாகச் செல்லப்பறவைகள் வீட்டில் வளர்ப்பது பிரபலமடைந்து வருகின்றது. செல்லப் பறவைகள் வளர்ப்போருக்கு ஏற்பட்டுள்ள தனிமையைத் தங்களது விளையாட்டுகளால் போக்கடித்துத் தங்களின் மேல் செலுத்தப்படும் அன்பை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுக்து வளர்ப்போர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறுகின்றன.

செல்லப்பறவை வளர்ப்பதன் நன்மைகள்

செல்லப்பறவைகள் வளர்ப்பதால் மனதிற்கு மகிழ்ச்சி மட்டுமின்றி மனஅழுத்தம் குறிப்பிடத்தக்க அளிவல் குறைகிறது. செல்லப்பறவைகளுடன் நேரத்தைச் செலவிடும் போது நம் உடலில் அயர்ச்சியை உண்டாக்கும். ஹார்மோன்களின் சுரப்பு குறைந்து ஆரோக்கியம் மேம்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. செல்லப்ப பறவைகள் பற்றி மேற்கொண்ட ஓர் ஆய்வில், செல்லப்பறவைகள் வளர்க்காத வீட்டுக் குழந்தைகளை விட வளர்ப்புப் பறவைகள் இருக்கும் வீட்டுக் குழந்தைகள், குறைவாக விடுமுறை எடுப்பதாகக் கண்டறிந்துள்ளனர். காரணம், அவர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, உடல்நலப் பிரச்சனைகள் ஏதும் தாக்குவது இல்லை.

செல்லப்பறவைகளின் வகைகள்

செல்லப்பறவைகளின் பலவகை உண்டு. தமிழகத்தில் வளர்க்கப்படும் அனைத்தும் வெளிநாட்டுச் செல்லப்பறவைகள்தான். உள்நாட்டுப் பச்சைக்கிளியோ, மைனாவோ வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதால் பெரும்பாலானோர் வெளிநாட்டுச் செல்லப்பறவைகளையே அதிகம் வளர்க்கின்றனர். லவ்பேர்ட்ஸ் எனப்படும் நேசப் பறவைகள், பஞ்சவர்ணக் கிளி, காக்கடீல் கிளி, பெருங்கொண்டைக் கிளி, ஆப்பிரிக்கச் சாம்பல் வண்ணக் கிளி, ஃபீன்சஸ் பறவை, சன் காணூர் கிளி ஆகியவை பொதுவாக நம் நாட்டில் வளர்க்கப்படும் வெளி நாட்டுச் செல்லப் பறவைகள் ஆகும். இது மட்டுமின்றி உள்நாட்டுச் செல்லப்பறவைகளாகச் சண்டைக்சேவல், மயில்புறா, சிராஸ் புறா, கிங் புறா ஆகியவை செல்லப்பறவைகளாக வளர்க்கப்படுகின்றன.

நேசப்பறவைகள்

எப்பொழுதும் சுறுசுறுப்பாகக் காணப்படும். இப்பறவைகள் இரண்டு வகைகளாக உள்ளன. அவை ஆஸ்திரேலிய நேசப் பறவைகள் மற்றும் ஆப்பிரிக்க நேசப் பறவைகள். இவை அழகான நிறத்திற்காகவும், இவை இணைந்தே இருக்கும் பான்மைக்காகவும் செல்லப்பறவைகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. பத்து முதல் பதினாறு செ. மீட்டர் வரை வளரும், குட்டையான வாலைக் கொண்டவை. சிவப்பு வண்ண அலகினையும் கண்களைச் சுற்றி எடுப்பான வெள்ளை வளையத்தினையும் கொண்டுள்ளன. இவற்றின் ஆயள் காலம் 8 முதல் 10 வருடங்கள் வரை ஆகும்.

பஞ்சவர்ணக் கிளி

பஞ்சவர்ணக் கிளிகளின் தாயகம் மத்திய மற்றும் தென் அமெரிக்ககாவில் உள்ள மழைக்காடுகள் ஆகும். மெக்சிகோ முதல் தென் அமெரிக்காவரை உள்ள பகுதிகள்தான் இவற்றின் இயற்கையான வாழ்விடமாகக் கருதப்படுகின்றன. பஞ்சவர்ணக் கிளிகளில் நீலம் மற்றும் தங்க நிறப் பஞ்சவர்ணக் கிளி, இளஞ்சிவப்பு பஞ்சவர்ணக் கிளி, பச்சை  இறக்கைப் பஞ்சவர்ணக் கிளி எனப் பலவகையான கிளிகள் காணப்படுகின்றன. முடிகள் இல்லாத பெரிய கறுப்புநிற அலகுகள், வெளிர் நிறம், வலது மற்றும் இடப்புறங்களில், வேறுபட்ட முகவண்ணங்கள் இவற்றின் அடிப்படையில் இவ்வகைக் கிளிகளை வேறுப்படுத்திக் காணலாம். கால்கள் ஒவ்வொன்றிலும் முன்பக்கம் பார்ப்பதாக இரண்டும், பின்பக்கம் பார்ப்பதாக இரண்டுமாக மொத்தம் நான்கு விரல்கள் அமையப் பெற்றிருக்கும். இவற்றின் ஆயட்காலம் 80 முதல் 100 ஆண்டுகள் ஆகும்.

காக்கடீல் கிளிகள்

இவ்வகைக் கிளிகள் ஆஸ்ரேலிய நாட்டில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை வெள்ளை, மஞ்சள், பழுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்குக் தலையில் சிறிய கொண்டை இருப்பதால், இவை சிறு கொண்டைக் கிளிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 16 முதல் 25 வருடங்கள் ஆகும்.

பெருங்கொண்டைக் கிளி

வெள்ளை நிறமுள்ள இவ்வகைப் பறவைகள் கருமை நிற வளைந்த அலகுகள் கொண்டவையாகும். இவை அழகு, அதிபுத்திசாலித்தனம் மற்றும் கணீர் சத்தம் கொண்டவையாகும். இவை 350 கிராம் முதல் 1 கிலோ வரை எடை கொண்டவை. பெருங்கொண்டைக் கிளிகளில் 44 வகைகள் உள்ளன. பொதுவாக வளர்க்கப்படும் வகைகள் கோபீன்ஸ், கந்தகநிறக் கொண்டைக் கிளி, மொளுக்கன் ஆகியவை ஆகும். இவற்றின் ஆயுட்காலம் 16 முதல் 25 வருடங்கள் ஆகும்.

ஆப்பிரிக்கச் சாம்பல் வண்ணக் கிளி

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாம்பல் வண்ணக் கிளிகள் மனிதர்கள் பேசும்போது, ஒலியைத் துல்லியமாகக் கவனித்து மீண்டும் உச்சரிக்கக் கூடியவை. இவ்வகைக் கிளிகள் 120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை.  இவற்றின் எடை 400 கிராம் ஆகும். இவை 30 – 35 செ. மீட்டர் நீளம் உள்ளவை. இவற்றின் ஆயள் காலம் 40 முதல் 50 வருடங்கள் வரை ஆகும்.

ஃபின்ஞ்சல் பறவை

ஆஸ்திரேலிய ஃபின்ஞ்சஸ் பறவைகள் அளவில் சிட்டுக் குருவிகளை விடச் சிறியவை. உடல் முழுவதும் பால் போன்ற வெள்ளை நிறம் கொண்டவை. உடலில் கொஞ்சம் கருப்பு கலந்து கண்களுக்கு அருகில் பழுப்பு நிறம் இருக்குமானால் அது “பைடு”. கண்களுககுக் கீழ் கண்ணீர் சொட்டுப் போல் கருப்பு நிறத்தில் சிறிய கோடு இருந்தால் இது ‘கிரைடு’ கொஞ்சம் அழுக்கான வெள்ளைப் போல் காட்சியளித்தால் அது ஃபான்டு, காது அருகில் வரிகுதிரைப் போல் இருந்தால் அது “ஜிப்ரா” என உட்பிரிவுகள் உள்ளன. ஆண் பறவைகளின் மூக்கு கருஞ் சிவப்பு நிறத்திலும், பெண் பறவைகளில் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். இவற்றின் ஆயுட்காலம் 15 முதல் 20 வருடங்கள் ஆகும்.

சன் காணூர்

தென் அமெரிக்கா நாட்டைச் சார்ந்த இவ்வகைப் பறவைகள் தங்க மற்றும் மஞ்சள் நிறக் கலவையில் காட்சியளிக்கும். இவற்றின் காதைச் சுற்றிச் சிவப்பு நிறம் காணப்படும். கருப்பு நிற அலகுகளைக் கொண்டவை. இவை 30 முதல் 40 வருடங்கள் வாழும்.

புறாக்கள்

புறாக்களில் கிட்டத்தட்ட 300 வகையான இனங்கள் உள்ளன. உலகெங்கும் புறாக்கள் காணப்பட்டாலும் இவை அதிகமாக இந்தியா, மலேசியா, இந்தோனீசியா முதலிய தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை தானியவகைகளை மட்டும் உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். பறவைகளிலேயே புறா மட்டும் தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது.  இவை 10 முதல் 15 வருடங்கள் வரை  வாழக்கூடியவை.

சண்டைச் சேவல்

கோழிவகைகளில் சண்டைச் சேவல் செல்லப்பறவையாக வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்த சேவல்கள் 2 அடி உயரம் வரை வளரும். அதிகபட்சமாக இரண்டரை அடி உயரம் கூட வளரும் இயல்புடையன. கிளி மூக்குப் போன்ற அலகு உடையன. அதிக எடை கொண்டன. கிளி மூக்குச் சேவல், பெருஞ்சேவல், ஜாதி சேவல் குஞ்சு ஒன்று 600 ரூபாய்க்கும், ஒரு கிலோ எடை கொண்ட சண்டைச் சேவல் 6,000 ரூபாய்க்கும், 2 கிலோ முதல் 3 கிலோ எடை கொண்ட சண்டைச் சேவல் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

எங்கு வாங்கலாம்?

சென்னை மண்ணடிப் பகுதியில் உள்ள “மாஸ்கான் சாவடியில்” ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சென்னை பல்லாவரத்தில் உள்ள “வெள்ளிக்கிழமை வாரச் சந்தையிலும் எல்லா வகைச் செல்லப் பறவைகளையும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்குப் பறவைகளுக்குத் தேவையான கூண்டு, தீவனவகைகளும் மலிவாகக் கிடைப்பதால் பறவை வளர்ப்போர் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.

வளர்க்கப்படும் செல்லப்பறவைகள் நாம் காட்டும் அன்பைவிட, பலமடங்கு நன்றியுணர்வை நம்மீது வைத்திருக்கின்றன. உயிரினங்களுக்குள் ஏற்படும் இந்த ஒற்றுமையினால் அன்பு செலுத்தும் பன்பு அனைவரிடத்திலும் விரிவடைகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே நமக்குப் பிடித்த செல்லப் பறவைகளை வளர்த்து நமக்குத் தினமும் ஏற்படும் அயர்ச்சியிலிருந்து மிக எளிதாக விடுபடலாம்.

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!