கட்டுரைகள்நாய்கள்மருத்துவ சிகிச்சை

செல்லப்பிராணிகள் வாயிலாக மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

Diseases transmitted to humans by pets

நாம் செல்லப்பிராணிகளை வீட்டைக் காக்கும் காவலர்களாக வளர்த்த காலம் மாறிக் குடும்பத்தில் ஒருவராகத் தற்பொழுது வளர்த்து வருகிறோம். இதுபோன்ற சூழலில், நாம் செல்லப்பிராணிகளுடன் நெருக்கமாகப் பழகும் பொழுது வெறிநாய்க்கடி, எலிக் காய்ச்சல் (மஞ்சள் காமாலை) போன்ற நச்சுயிரி நோய்களும் அக மற்றும் புற ஒட்டுண்ணி நோய்களான டாக்சோபிளாஸ்மோசிஸ், குட்டேனியஸ் லார்வல் மைகிரன்ஸ் (தோலில் லார்வா புழுக்கள் ஊடுருவல்), விசரல் லார்வல் மைகிரன்ஸ் (உடலில் புழு ஊறுதல்), மற்றும் ஸ்கேபிஸ் போன்ற நோய்கள் சுகாதாரமற்ற நிலையில் மனிதர்களுக்குப் பரவுகின்றன.

வெறிநாய்க் கடி

நாம் காலை மற்றும் மாலையில் நடந்து செல்ல உடன் துணையாகச் செல்லப்பிராணிகளைத் தான் அழைத்துச் செல்கிறோம். இவ்வாறு செல்லும் பொழுது திடீரென எதிர்பராமல் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட தெரு நாய்கள் செல்லப்பிராணிகளைக் கடிக்கும் பொழுது இந்நோய் பரவுகிறது. இந்த  நோய் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால் திடீரென அமைதியாக இருக்கும் நாய் கோபமாக மாறி எதை வேண்டுமானாலும் எஜமானி முதற்கொண்டு கடிக்கும். உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல், தொடர்ச்சியாக கத்தி கொண்டிருத்தல் போன்ற அறிகுறிகளைக் காணலாம்.

திடீரெனப் பயம், காய்ச்சல், தலைவலி, கடிபட்ட இடத்தில் அரிப்பு, உணர்ச்சி மிகுந்து காணப்படுதல், உணவு உட்கொள்ளாமை, தண்ணீரைப் பார்த்தால் வெறுப்பு போன்ற அறிகுறிகளை மனிதர்களில் காணலாம். இந்த நோயைக் கட்டுப்படுத்த மூன்று மாதத்திற்கு மேற்பட்ட அனைத்து நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநாய்க்கடித் தடுப்பூசி போட வேண்டும். அதன் பிறகு ஆண்டுதோறும் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும். இதுமட்டுமல்லாமல் தெரு நாய்கள் கடித்தால் உடனடியாக வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க முன்கூட்டியாக 0,3,7,14 மற்றும் 28 ஆவது நாளில் கால்நடை உதவி மருத்துவரை அணுகித் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

எலிக் காய்ச்சல் (மஞ்சள் காமாலை)

பொதுவாக இந்த நோய் செல்லப்பிராணிகள் பெருச்சாளியைப் பிடித்துச் சாப்பிடும் பொழுதும், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நாயின் சிறுநீரின் மூலமும் செல்லப்பிராணிகளுக்குப் பரவுகிறது. மனிதர்களுக்கு இந்நோய், நோயால் பாதிக்கப்பட்ட நாயின் சிறுநீரின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவுகிறது. இந்த எலிக் காய்ச்சல் நோயில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுவதால் காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை, வாந்தி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் காணப்படும். கடைசியாகச்  சிறுநீரகம் பழுதடைந்து செல்லப்பிராணிகள் இறந்து விடும்.

மனிதர்களில் தலைவலி, காய்ச்சல், கண் இமைகள் சிவந்து காணப்படுதல், வாந்தி, பேதி, வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்க 45 நாள்களுக்கு மேற்பட்ட குட்டிகளுக்கு ஒருங்கிணைந்த தடுப்பூசியும் 21 நாள்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியும் மற்றும் ஆண்டுதோறும் மறுதடுப்பூசியும் போட வேண்டும். மேலும், நோயால் பாதிக்கப்பட்ட நாயைக் கை உறைகள் அணிந்து தொட வேண்டும்.

டாக்சோபிளாஸ்மோசிஸ்

இந்த நோய் டாக்சோபிளாஸ்மா கான்டி என்கிற ஓரணு ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. பூனைகள் எலி மற்றும் அசைபோடும் கால்நடைகளின் இறைச்சியை உட்கொள்ளும் பொழுது இவற்றிற்குப் பரவுகிறது. பூனையின் மலத்தின் வழியாக வெளியேறுகின்ற கூட்டுப்பருவ முட்டைகள் மறைமுகமாகப் பூனையின் உரோமத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். நாம் பூனையைத் தொட்டுவிட்டு மறந்து கை கழுவாமல் சாப்பிடும் பொழுது நமக்குப் பரவுகிறது. இந்நோயில் காய்ச்சல், நிணநீர் முடிச்சி அழற்சி, நுரையீரல் அழற்சி, சதை வலி மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளைக் காணலாம். முக்கியமாகப் பெண்கள் கர்ப்பக் காலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டால் கருச்சிதைவு மற்றும் குழந்தைகள் பிறவி ஊனத்துடன் பிறக்கும். பூனைகளுக்குப் பூச்சி மருந்து கொடுத்து, செல்லப் பிராணிகளைத் தொட்ட பிறகு நன்றாகக் கை கழுவிட்டுச் சாப்பிட்டால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுவதை தடுக்கலாம்.

தோல் நோய்

குட்டேனியஸ் லார்வல் மைகிரன்ஸ் எனப்படும் தோலில் இளம் புழுக்கள் ஊடுருவல் எனப்படும் தோல் நோய். நாய் மற்றும் பூனைகளில் காணப்படும் அக ஒட்டுண்ணிகளான அன்கைலோஸ்டோமா கெனைனம், அன்னைலோஸ்டோமா பிரேசிலென்சி மற்றும் அன்சினோஜீயா ஸ்டெப்பனோசெப்பாலா போன்றவற்றின் லார்வாக்கள் மலம் வழியாக வெளியேறி மண்ணை அசுத்தப்படுத்துகின்றன. இந்த மண்ணில் குழந்தைகள் விளையாடிவிட்டுக் கை கழுவாமல் சாப்பிடும்பொழுது குழந்தைகளுக்குப் பரவுகிறது. தோலில் இளம் புழுக்கள் நகருவதால் தோல் சிவந்து பரு போன்ற புண்கள் ஏற்பட்டு அரிப்பு காணப்படும். செல்லப்பிராணிகளில் இரத்தச்சோகை, கழிச்சல் மற்றும் உடல் மெலிந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகளைக் காணலாம். நாய் மற்றும் பூனைகளுக்கு முறையாகப் பூச்சி மருந்து கொடுத்து, விளையாட்டு மைதானம், கடற்கரை போன்ற பகுதிகளில் மலம் கழிப்பதைத் தடுப்பதின் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.

குழந்தைகள் உடலில் புழு

லார்வல் மைகிரன்ஸ் (உடலில் புழு ஊறுதல்) செல்லப்பிராணிகளில் காணப்படும் உருண்டைப் புழுக்களான டாக்சோகாரா கேனிஸ், டாக்சோகாரா கேட்டை, நத்தோஸ்டோமா ஸ்பைனிஜெரம் போன்றவற்றின் இளம் புழுக்கள் (லார்வாக்கள்) மலத்திலிருந்து வெளியேறி மண்ணில் காணப்படுகின்றன. குழந்தைகள் மண்ணில் விளையாடிவிட்டுச் சுகாதாரமில்லாமல் உணவு சாப்பிடும்பொழுது குழந்தைகளுக்குப் பரவுகிறது. இந்த நோயால் 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த இளம் புழுக்கள் உடலில் ஊர்ந்து செல்வதால் காய்ச்சல், இருமல், கண் தெரியாமை மற்றும் தோல் சிவந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகளை மனிதர்களில் காணலாம்.

செல்லப்பிராணிகளில் கழிச்சல், வாந்தி, மற்றும் நுரையீரல் அழற்சி போன்ற அறிகுறிகளைக் காணலாம். செல்லப்பிராணிகளுக்கு முறையாகப் பூச்சி மருந்து கொடுத்து, மண் மாசுபடுவதைத் தடுத்துச் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதின் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.

(ஸ்கேபிஸ்) சொறி சிரங்கு

இது சார்காப்டிஸ் ஸ்கேபி என்ற புற ஒட்டுண்ணியால் ஏற்படுகிற நோய் ஆகும். செல்லப்பிராணிகளில் இந்நோய் 10 நாள் முதல் 8 வாரத்திற்குட்பட்ட குட்டிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இந்நோயினால் பாதிக்ப்பட்ட குட்டிகளில் காது, வயிற்றின் அடிப்பகுதி, நெஞ்சு, முன்னங்கால், பின்னங்கால் மூட்டுகளில் உள்ள தோல் சிவந்து மஞ்சள் நிறத் தடிப்புடன் முடி உதிர்ந்து, அதிக அரிப்பு ஏற்படுவதால் செல்லப்பிராணிகள் சொரிந்து கொண்டே இருக்கும்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், இந்நோயினால் பாதிக்கப்பட்ட குட்டிகளைத் தருணத்தில் நெருக்கமாக அணைத்துக் கொஞ்சம் பொழுது பரவுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் கை, மார்பகப் பகுதி, வயிறு மற்றும் தொடைப் பகுதியில் வேர்க்குரு போன்ற பருக்கள் ஏற்பட்டு அரிப்பு காணப்படும். செல்லப்பிராணிகளுக்கு முறையாகப் பூச்சி மருந்து கொடுத்து. ஆரோக்கியமான உணவு அளித்து நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் செல்லப்பிராணிகளில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். நாம் செல்லப்பிராணிகளுடன் பழகும்பொழுது சுகாதார முறைகளை மேற்கொண்டால் இந்நோய் நமக்குப் பரவுவதைத் தடுக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் செல்லப் பிராணிகளை எந்த அளவு இன்றியமையாததாக வளர்க்கிறோமோ அந்த அளவு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம். செல்லப் பிராணிகளுக்குச் சரியான நேரத்தில் பூச்சி மருந்து கொடுத்து, தடுப்பூசி அளிப்பதன் மூலம் மேற்கூறிய நோய்களைச் செல்லப்பிராணிகளில் கட்டுப்படுத்தலாம். மேற்கூறிய சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் “நாம் விலங்குவழிப் பரவும் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்”.

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Tamil Pets !!